
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்கே செல்வமணி உள்ளிட்ட திரைப்பட சங்கங்களின் நிர்வாகிகள் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.
இச்சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன், “திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில், முதல்வரை சந்தித்து, மனு அளித்தோம். சிறந்த படங்களை தேர்வு செய்யும் போது, மத்திய அரசு, தயாரிப்பாளருக்கு, சான்றிதழ், கேடயம், பரிசுத் தொகை கொடுப்பது போல், தமிழக அரசும் வழங்க வேண்டும். சென்னையில், படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். நடவடிக்கை எடுப்பதாக, முதல்வர் உறுதி அளித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
ஆர்கே செல்வமணி கூறும்போது, “தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு, பையனுாரில், அரசு, 65 ஏக்கர் நிலம் கொடுத்துள்ளது. அந்த இடத்தை, ஓ.எம்.ஆர்., சாலையுடன் இணைக்க, அரசு உதவ வேண்டும். மருத்துவமனை கட்ட, நகருக்குள் நிலம் ஒதுக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் சங்கம், தொழிலாளர்கள் சம்மேளனம், நடிகர் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் திரைப்பட உரிமையாளர்கள் சங்கத்தையும் ஒருங்கிணைத்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரி கட்டுப்பாட்டில், தமிழ்நாடு திரைப்பட துறைக்கான வாரியம் அமைக்க வேண்டும் என, முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.