குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பு
Posted: Wed,25 Oct 2017 03:31:07 GMT
தேர்தல் ஆணையம், குஜராத் தேர்தல் தேதியை அறிவிக்காமல் தாமதம் செய்து வருகிறது என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், இன்று தலைமை தேர்தல் ஆணையர் குஜராத் தேர்தல் தேதியை அறிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளார்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி, “குஜராத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 9 ம் தேதி ஓட்டுப்பதிவு நடத்தப்படும். வேட்புமனு தாக்கல் நவம்பர் 14 துவங்கி நவம்பர் 21 வரை நடைபெறும். நவம்பர் 22 ம் தேதி வேட்புமனுக்கள் சரிபார்க்கப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெற நவம்பர் 24 கடைசி தேதியாகும். இரண்டாம் கட்டமாக டிசம்பர் 14 ம் தேதி 93 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெறும். வேட்புமனு தாக்கல் நவம்பர் 20 ம் தேதி துவங்கி நவம்பர் 27 வரை நடக்கும். வேட்புமனுக்கள் நவம்பர் 28 ல் பரிசீலிக்கப்படும். மனுக்களை திரும்பப் பெற நவம்பர் 29 கடைசி நாளாகும். ஓட்டு எண்ணிக்கை டிசம்பர் 18 ம் தேதி நடக்கும்” என்று தெரிவித்தார்.
மேலும், “குஜராத்தில் சட்டசபை தேர்தலுக்காக 50,128 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படும். யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் ஒப்புகை சீட்டு அளவு அதிகரிக்கப்படும். கடந்த ஆண்டை விட ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். 102 ஓட்டுப்பதிவு மையங்கள் முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்படும். வேட்புமனு தாக்கல், வேட்பாளர் முதல் அனைத்தும் சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.
குஜராத்தில் தேர்தல் நடைமுறை தற்போது முதல் அமலுக்கு வருகிறது. வேட்பாளர் ஒருவருக்கான தேர்தல் செலவு ரூ.28 லட்சம் ஆகும். தேர்தல் செலவுகள் குறித்த விபரங்களை தேர்தல் முடிவடைந்த 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் ஒப்படைக்க வேண்டும். அரசியல் கட்சிகள் தேர்தல் முடிந்த 75 நாட்களுக்குள் செலவு கணக்குகளை ஒப்படைக்க வேண்டும். தேர்தல் பறக்கும்படை வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பெருத்தப்படும். பதற்றமான ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்படும். தேர்தல் கண்காணிப்பு பணிக்காக அண்டை மாநில போலீசார் பயன்படுத்தப்படுவார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.
  • 0 comment(s)
Be the first person to like this.
Page generated in 0.3312 seconds with 21 queries and GZIP enabled on 173.231.211.226.